ADDED : செப் 18, 2026 08:11 AM

வியாபார விஷயமாக வெளியூர் சென்ற முல்லா, பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துச் சென்றார். அவன் சந்தேக புத்தி கொண்டவன். மறுநாள் காலையில் அந்த ஊரிலுள்ள சந்தையை இருவரும் அடைந்தனர்.
''தெருவெல்லாம் கூட்டமாக இருக்கு. மக்கள் எங்கிருந்து வருகிறார்களோ. இவர்கள் எப்படி செல்ல வேண்டிய இடத்தை அடையாளம் காண்கிறார்களோ தெரியவில்லையே'' என சந்தேகத்துடன் கேட்டான்.
பதில் சொல்லாமல் நடந்தார் முல்லா. பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்த விடுதியில் தங்கினர். சோர்வாக இருந்ததால் சீக்கிரமாக துாங்கச் சென்றார் முல்லா. அப்போது இளைஞன், ''காலையில் நான் துாங்கி எழும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வேன்'' என பரிதாபத்துடன் கேட்டான்.
'இவன் அரை பைத்தியம் போலிருக்கு... எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறானே' என நினைத்தார் முல்லா.
பின் அவனிடம், ''கவலைப்படாதே. சிவப்புத் துணி ஒன்றை உன் காலில் கட்டுகிறேன். காலையில் எழுந்து உன் காலைப் பார். சிவப்புத் துணி இருந்தால் நீ தான் என அடையாளம் தெரியும்'' என்றார்.
அதன்படி சிவப்புத்துணி கட்டினார். இருவரும் துாங்கினர். நள்ளிரவில் எழுந்த முல்லா, அவனது காலில் கட்டியிருந்த சிவப்புத் துணியை அவிழ்த்து தன் காலில் கட்டி விட்டுத் துாங்கினார்.
பொழுது விடிந்தது. 'ஐயோ என்னை காணவில்லையே. காலில் இருந்த துணியைக் காணோமே'' என அழுதான். முல்லாவின் கால்களை பார்த்ததும், ''நான் கிடைத்து விட்டேன்'' என சிரித்தான்.
நடந்ததை விளக்கி புரிய வைத்தார். சந்தேகப் புத்தி கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
