ADDED : அக் 29, 2026 01:29 PM

நபிகள் நாயகம் மெதீனாவுக்கு குடிபெயர்ந்தார். அவரது பேச்சு, செயலால் கவரப்பட்ட மக்கள் அவருடைய கொள்கைகளை பின்பற்றினர். மக்கள் அவரை தலைவராக கொண்டாடினர். முன்பு மெதீனாவில் தலைவர்களாக இருந்த பலர் நாயகத்தைக் கண்டு பொறாமைப்பட்டனர். நாளடைவில் கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
இதற்காக சதித்திட்டம் தீட்டினர். மெதீனா நகருக்கு வெளியே ஒரு பள்ளிவாசலைக் கட்டினர். ''நாங்கள் உங்களை பின்பற்றுகிறோம். பள்ளிவாசலுக்கு நீங்கள் வருகை தந்து எங்களின் முதல் தொழுகையை ஆரம்பித்து வைக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தனர். அங்கு வைத்து அவரைக் கொல்ல வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நாயகமும் புதிய பள்ளிவாசலுக்கு வர சம்மதித்தார்.
இந்த நேரத்தில் பின்வரும் வசனத்தை இறைவன் அருளினான்.
'கெட்ட நோக்கத்துடன் பள்ளிவாசலை கட்டியவர்கள், 'நாங்கள் நல்லதைத் தவிர வேறு எதையும் நாடவில்லை' என சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யான மனிதர்கள். முகம்மது நபியே... ஒருபோதும் அங்கு வணங்காதீர்' என்பதே அது. இதனால் அந்த தீயவர்களின் சதி அம்பலமானது. நம்பியவரை இறைவன் கைவிடுவதில்லை. நல்லவன் வாழ்வான்.
