ADDED : நவ 13, 2026 08:42 AM
வீட்டுக்கு வந்தவர்கள் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என பலர் விரும்புவர். ஆனால் சிலரோ வந்தவர்கள் 'எப்ப வீட்டை விட்டு செல்வார்கள்' என காத்திருப்பர். சில வீடுகளில் வந்தவர்களை 'வாங்க' என்று கூட வரவேற்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட சம்பவத்தை படிப்பது அவசியம்.
தோழர்களிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அங்கு வந்த ஒருவர், ''இறைத்துாதரே... நான் நேற்று ஒருவரின் வீட்டிற்குச் சென்றேன். அவர் 'வா' என ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. வெறுப்பாக பேசினார். எதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன் என நினைக்கும்படி நடந்தார். ஒருவேளை அவர் என் வீட்டுக்கு வந்தால், நானும் அவரைப் போல் நடக்கலாமா'' எனக் கேட்டார் வந்தவர்.
''நல்லவேளை கேட்டீர்கள். இல்லாவிட்டால் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி இருப்பீர்கள்''
''என்ன சொல்கிறீர்கள்''
''ஆம். உங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் உபசரிப்பது கடமை. அதுமட்டுமல்ல. அவரிடம் கனிவுடன் பேச வேண்டும். இதையே அவன் விரும்புகிறான்''
என்றார் நாயகம்.
பார்த்தீர்களா... விருந்தினருக்காக உங்களின் வீட்டுக்கதவு திறந்தே இருக்கட்டும்.
