
முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தவர்கள் குரைஷிகள். இவர்களில் பலரும் முன்பு நடந்த பத்ருப் போரில் கொல்லப்பட்டனர். இதற்காக பழிவாங்கும் நோக்கில் குரைஷி பெண்கள் ஆக்ரோஷமாக பாடியும், முரசு அறைந்தும் போர்க்களத்திற்குள் புகுந்தனர். அப்போது மெதீனாவாசியான அபூஆமீர் என்பவர் இருநுாறு குரைஷி வீரர்களுடன் போர்க்களத்தில் முன்னே வந்தார். மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த இவர், நபிகள் நாயகம் மெதீனாவிற்கு வந்த போது மெக்காவிற்கு சென்று குடியேறினார். தான் முன்னே வந்து நின்றதும் மக்கள் தன்னுடன் சேர்ந்து கொள்வர் என எதிர்பார்த்தார். ஆனால் எதிராக நின்ற அன்சாரி முஸ்லிம்களிடம், ''நீங்கள் என்னை அறிவீர்களா? நான்தான் அபூஆமீர்'' என்றார். அதற்கு அவர்கள், ''துரோகியே! உன்னை நன்றாக அறிவோம். உனது விருப்பம் நிறைவேறாது'' என எதிராக பதிலளித்தனர்.
'அன்சார்' என்றால் உதவியாளர் என பொருள். இவர்கள் நாயகத்தின் காலத்தில் மெதீனா நகரில் வாழ்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள்.
மற்றொரு புறமோ குரைஷிகளின் கொடியைப் பிடித்தபடி நின்றிருந்தார் தல்ஹா. அவர், ''இறந்த உங்கள் வீரர்கள் சுவர்க்கத்திலும், எங்கள் வீரர்கள் நரகத்திலும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நீங்கள் பொய்யர்கள். இக்கூற்றை நம்புபவர் யாரேனும் இருந்தால் என்னோடு சண்டையிடுங்கள்'' என சவால் விட்டார். உடனே ஹலரத் அலீ ஆக்ரோசத்துடன் அவர் மீது வாளை வீச அந்த நொடியே அவர் வீழ்ந்தார். இதனால் மேலும் கோபமுற்ற குரைஷிகள் வேகமாக முன்னேறி தாக்க ஆரம்பித்தனர்.