PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

'அரசியல் வேறு, நட்பு வேறு என்பதில் எங்கள் தலைவி மிகவும் தெளிவாக உள்ளார்...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி பெருமையுடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மம்தாவுக்கு அரசியலில் நண்பர்களை விட, எதிரிகள் அதிகம். காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.,வாக இருந்தாலும் சரி; இரண்டு கட்சி தலைவர்களையும் ஒரே தராசில் தான் எடை போடுவார்.
ஒருவரை அரசியல் ரீதியாக தாக்கி பேசுவது என்றால், எந்த நிலைக்கும் இறங்கி வர தயங்க மாட்டார். இதனால், மம்தாவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான நட்பு வட்டம் இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.
ஆனால் அவரோ, அரசியலையும், நட்பையும் தெளிவாக பிரித்து வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் விளையும் ஹிம்சாகர், லங்க்ரா, அமர்பாலி ரக மாம்பழங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. மிகவும் சுவையானவை.
சமீபத்தில் இந்த மாம்பழங்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோருக்கு பார்சலில் அனுப்பி வைத்தார். ஒவ்வொரு பார்சலிலும், தலா, 10 கிலோ மாம்பழங்கள் இடம் பெற்றிருந்தன.
இதை பார்த்த மேற்கு வங்க அரசியல்வாதிகள், 'அரசியலில் எலியும், பூனையுமாக இருந்தாலும், நட்புக்கு மிகச் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார், மம்தா...' என, பாராட்டு பத்திரம் வாசிக்கின்றனர்.