PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

'அப்பாடி... நல்ல டீ குடித்து எத்தனை நாளாச்சு. இனி கவனமாக இருக்க வேண்டும்...' என,ஏக்கத்துடன் கூறுகிறார், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா.
டில்லியில் நடந்த மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலில் சிறைக்கு சென்றவர், சிசோடியா தான். ஆம் ஆத்மியில் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக முக்கியமான தலைவரும் இவர் தான்.
சிறைக்கு சென்றதும், துணை முதல்வர் பதவி பறிபோய் விட்டது. ஜாமின் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தில் இருந்து, உச்ச நீதிமன்றம் வரை ஏறி இறங்கியும் பலனில்லை. நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டியிருக்குமோ என்ற பீதியில் இருந்தார், சிசோடியா.
ஒரு வழியாக, 17 மாதங்களுக்குப் பின் ஜாமின் கிடைத்து, சமீபத்தில் சிறையிலிருந்து வெளியில் வந்தார். வீட்டில் மனைவி போட்டுக் கொடுத்த டீயை சாப்பிட்டதும், அவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது.
'சிறை டீயை குடித்து குடித்து, நாக்கு மரத்து போய் விட்டது. ஒரு நல்ல டீ குடிக்க, 17 மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்றே...' என, உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார், சிசோடியா.
சில ஆம் ஆத்மி நிர்வாகிகளோ, 'தலைவரே, கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்து வெளியில் வந்தால், மறுபடியும் ஏதாவது ஒரு வழக்கில் உங்களை துாக்கி உள்ளே வைத்தாலும் வைப்பர்...'என பீதியை கிளப்ப, கலக்கத்தில் உள்ளார்சிசோடியா.

