PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

'இவரை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளது...' என, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குறித்து குழப்பத்தில் உள்ளனர், எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும், 'இண்டியா' கூட்டணி கட்சியினர்.
பா.ஜ.,வுக்கு எதிராக நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்தது தான், 'இண்டியா' கூட்டணி. தி.மு.க., ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மம்தா பானர்ஜி. ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கிய நேரத்தில், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து, குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அதன்பின்னும், வேண்டா வெறுப்பாகத் தான் இந்த கூட்டணி யில் தொடர்கிறார். சமீபத்தில், டில்லியில் நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்தனர். ஆனால், மம்தா மட்டும் இதில் பங்கேற்று, 'இண்டியா' கூட்டணிக்கு வெறுப்பை ஏற்படுத்தினார்.
அதே நேரம், அந்த கூட்டத்தில், தனக்கு பேசுவதற்கு போதிய நேரம் கொடுக்கவில்லை என கூறி, பாதியிலேயே வெளியேறிய மம்தா, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதைப் பார்த்த, 'இண்டியா' கூட்டணியினர், 'இவரை நம்பலாமா; வேண்டாமா, நல்லவரா; கெட்டவரா என கணிக்க முடியவில்லையே...' என, புலம்புகின்றனர்.