
'அவசரப்பட்டு பேசி விட்டோமோ...' என கவலைப் படுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார். இங்கு நிதீஷ் குமார் முதல்வராக பதவி வகித்தாலும், அவரது கட்சியை விட, கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு தான் எம்.எல்.ஏ.,க்கள் அதிகம்.
இதற்கு முன், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, 'அடுத்த சட்டசபை தேர்தலில் நான் முதல்வராக இருக்க மாட்டேன். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு, ஒதுங்கி விடுவேன்...' என, பேசியிருந்தார், நிதீஷ்.
தற்போது இந்த பேச்சை காரணம் காட்டி, பீஹாரில் உள்ள பா.ஜ.,வினர் பெரிய திட்டத்தை வகுத்துள்ளனர்.'அடுத்த சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். ஆனால், முதல்வர் பதவி நமக்குத் தான் கிடைக்கும்.
'அடுத்த தேர்தலுக்கு பின், முதல்வராக இருக்க மாட்டேன் என நிதீஷ் குமார் ஏற்கனவே பெருந்தன்மையுடன் கூறி விட்டார். அதனால், அவரால் எந்த பிரச்னையும் இருக்காது...' என, கூறுகின்றனர்.
இந்த தகவலை ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் நிதீஷிடம் கூறவே, அவர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
'முதல்வராக இருக்க மாட்டேன் என ஒரு பேச்சுக்கு கூறினால், அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக அரசியலில் ஓய்வு தந்து அனுப்பி விடுவர் போலிருக்கிறதே...' என புலம்புகிறார், நிதீஷ் குமார்.