PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

'யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்; எனக்கு பதவி முக்கியம் என முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி கூறுகின்றனர், இங்குள்ள மக்கள்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி ஆட்சி என்பதால், புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் திணறி வந்தார், ஏக்நாத் ஷிண்டே.
கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் முடிவெடுத்தால், பதவி பறிபோய் விடுமோ என்ற பயம் தான் இதற்கு காரணம். மஹாராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இதுவரை பதுங்கி பதுங்கி பணியாற்றி வந்த ஷிண்டே, இப்போது பாயத் துவங்கி விட்டார். மாத வருமானம், 2.50 லட்சத்துக்கு குறைவாக இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அடுத்தபடியாக, படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப ஊக்கத் தொகை அளிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
'இலவசங்களை வாரி வழங்குவதாக என் மீது சிலர் விமர்சனங்களை வைக்கலாம்; ஆனால், அதை பற்றி கவலைப்பட்டால், மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது...' என்கிறார், ஷிண்டே.