PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

'அப்பாடி, இதை வைத்தே அடுத்த சட்டசபை தேர்தல் வரை ஓட்டி விடலாம்...' என, தெம்பாக இருக்கின்றனர், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள்.
சமீப காலமாகவே ஆதித்யநாத்துக்கு நெருக்கடி மேல் நெருக்கடி அதிகரித்தது. கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவு, அவரது அரசியல் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்து விட்டது. துணை முதல்வரிலிருந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை கேள்வி எழுப்பத் துவங்கி விட்டனர்.
அதிலும், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்திக்கு உட்பட்ட லோக்சபா தொகுதியில், பா.ஜ., தோல்வி அடைந்தது, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இது குறித்து பார்லிமென்டிலேயே எதிர்க்கட்சியினர் கிண்டலடித்தனர். இதனால், ஆதித்யநாத்துக்கு பதிலாக, வேறு யாரையாவது, உ.பி., முதல்வராக பா.ஜ., மேலிடம் நியமிக்கும் என்ற வதந்தியும் பரவியது.
இந்த நிலையில் தான், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்ட கருத்துக்கணிப்பில், 'நாட்டின் சிறந்த முதல்வர்' என்ற பெருமையை, யோகி ஆதித்யநாத் தக்க வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டும் இவருக்கு தான் இந்த பெருமை கிடைத்தது. இந்தாண்டு அவருக்கு ஆதரவாக கருத்து கூறியவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அவரே முதலிடத்தில் இருப்பதாக, அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிம்மதி அடைந்துள்ள ஆதித்யநாத் ஆதரவாளர்கள், 'இன்னும் சில மாதங்களுக்கு விமர்சிப்பவர்கள் எல்லாம் மூச்சு விட மாட்டார்கள்...' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர்.