PUBLISHED ON : ஆக 06, 2025 12:00 AM

'பாவம்... அவருக்கு அரசியல் செய்ய வேறு பிரச்னையே கிடைக்கவில்லை போலிருக்கிறது...' என, உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
தற்போது நடந்து வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், தன்னை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் அகிலேஷ் இறங்கியுள்ளார். இதற்காக, லோக் சபாவில் தினமும் மத்திய அரசை கண்டித்து பேசி வருகிறார்.
பார்லிமென்டிற்கு வெளியில் எதிர்க்கட்சி யினரின் போராட்டங்களை யும் அவரே முன்னின்று நடத்துகிறார் . சமீபத்தில், மத்திய அரசை கண்டித்து, லோக்சபாவில் அகிலேஷ் காரசாரமாக பேசினார். இது, பார்லிமென்ட் நடவடிக்கைகளை ஒளிபரப்பும், 'சன்சாத் டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பானது.
அதேநேரத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரம் குறித்து ராஜ்யசபாவில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதால், அகிலேஷ் உரைக்கு பதிலாக, ராஜ்நாத் உரை, 'டிவி'யில் ஒளிபரப்பப்பட்டது.
பார்லிமென்டிற்கு வெளியில் வந்ததும், அகிலேஷின் ஆதரவாளர்கள் இதுகுறித்து அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆவேசமடைந்த அகிலேஷ், 'பார்லிமென்ட் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதில் கூட ஆளுங்கட்சியினர் அரசியல் செய்கின்றனர்...' என, புலம்பி தீர்த்தார்.
பா.ஜ.,வினரோ, 'முக்கியமான பிரச்னைகள் பற்றி மூத்த அமைச்சர் பேசும்போது, அதைத் தான், 'டிவி'யில் ஒளிரப்புவர். இது தெரியாமல், அகிலேஷ் ஆட்டம் போடுகிறாரே...' என, பதிலடி கொடுத்தனர்.