PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

'அரசியல்வாதிகளுக்கு காலம் கடந்த பின் தான், தாங்கள் செய்த துரோகம், மற்றவர்கள் அவர்களுக்குசெய்த உதவிகள் ஞாபகத்துக்கு வரும் போலிருக்கிறது...' என கிண்டல் அடிக்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
காங்கிரஸ் மூத்ததலைவர்களில் ஒருவர் சுஷில் குமார் ஷிண்டே. மஹாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர், லோக்சபா காங்., தலைவர், கவர்னர் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவர். காங்கிரசின் மற்றொருமூத்த தலைவர் திக்விஜய் சிங். இவர், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரும், அந்த மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.
சுஷில் குமார் ஷிண்டேயின் வாழ்க்கை குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா, சமீபத்தில் டில்லியில் நடந்தது; இதில் சிறப்பு விருந்தினராக திக்விஜய் சிங் பங்கேற்றார்.
அப்போது அவர், 'கடந்த 1993ல், சுஷில் குமார்ஷிண்டே, ம.பி., மாநிலத்துக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருந்தார். அப்போது முதல்வர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி நிலவியது. சுஷில் குமார் ஷிண்டே எனக்கு ஆதரவு அளித்ததால் தான், முதல்வர் பதவியில் அமர்ந்தேன்...' என, கண்கள் கசிய உருக்கமாக பேசினார், திக்விஜய் சிங்.
பதிலுக்கு சுஷில் குமார் ஷிண்டேவும், 'எனக்கும் திக்விஜய் சிங் நிறைய உதவிகள் செய்துள்ளார்...' என, கண் கலங்கினார்.
இதைப் பார்த்த சக காங்., தலைவர்கள்,'ஒரு காலத்தில் பதவிக்காக கோஷ்டி அரசியல் செய்தவர்கள், இப்போது மாறி மாறி கண் கலங்குவதை பார்த்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது...' என, முணுமுணுத்தனர்.