PUBLISHED ON : மே 25, 2026 01:06 AM

'தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டி விட்டார்...' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பற்றி பெருமிதத்துடன் கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும்.
தேர்தல் வியூகங்களை வகுப்பதுடன், அதை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டுபவர் என்ற பெயர், அமித் ஷாவுக்கு உண்டு. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.,வின் வெற்றி என்பது, நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாக இருந்தது.
ஆனால், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி, இந்த மாநிலங்களில் பா.ஜ.,வை வெற்றி பெற வைத்து, ஆட்சி அமைக்க வைத்ததில், பிரதமர் மோடிக்கு இணையான பங்கு அமித் ஷாவுக்கும் உண்டு.
அதேசமயம், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது, அமித் ஷாவின் லட்சியமாக இருந்தது. கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, இதற்காக தீவிரமாக செயல்பட்டார் அமித் ஷா. ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த வெற்றியை பெற்றுத் தந்து விட்டார், அமித் ஷா. இப்போது மேற்கு வங்கத்தில், முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
'மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை அகற்றுவது என்பது, எங்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது. ஆனால், அமித் ஷா அதையும் சாதித்து காட்டி விட்டார்...' என புகழ்கின்றனர், பா.ஜ.,வினர்.
