PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

'இதையெல்லாம் எங்கள் தலைவி எப்படி ஜீரணிப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...' என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை நினைத்து பரிதாபப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராக பதவி வகித்த மம்தாவின் வெற்றியை பா.ஜ., தடுத்து நிறுத்தியது, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ., சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றுள்ளார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, மம்தா பானர்ஜியின் வலது கரமாக இருந்தவர்.
கடந்த 2007ல், மேற்கு வங்கத்தின் நந்திகிராமில், அப்போதைய இடதுசாரி அரசு, ரசாயன தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்துக்கு தலைமையேற்றவர் தான், இந்த சுவேந்து அதிகாரி.
கடந்த 2020ல் மம்தாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அந்த கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.,வில் இணைந்த சுவேந்து அதிகாரி, இப்போது மம்தாவின் பிரதான அரசியல் எதிரியாக மாறியுள்ளார்.
மேற்கு வங்க மக்களோ, 'யானை காதில் எறும்பு புகுந்த கதையாக, மம்தாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், சுவேந்து அதிகாரி...' என்கின்றனர்.
