PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

‘அனைத்து கணிப்புகளும் தவிடுபொடியாகி விட்டதே...’ என கவலைப்படுகிறார், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரான முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சோர்வடைந்த ஜெகன்மோகன் ரெட்டி, பெரிய அளவில் அரசியலில் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருந்து வந்தார்.
‘இந்த அமைதி தொடர்ந்தால், அரசியலில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விடுவோம்’ என, அவரது ஆதரவாளர்கள் எச்சரித்ததால், சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார் ஜெகன்.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தீவிர பிரசாரம் செய்தார். ஆனாலும், ஆளுங்கட்சியே அபார வெற்றி பெற்றது. பெரும்பாலான நகராட்சிகளை, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியே கைப்பற்றியது.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, ‘இரண்டரை ஆண்டுகளுக்கு பின் வரும் சட்டசபை தேர்தலில் ஜெயித்து, மீண்டும் முதல்வராகி விடலாம் என நினைத்தால், அது நடக்காது போலிருக்கிறதே...’ என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.
