PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

‘தன் பலத்தையே, பலவீனமாக மாற்றும் திறமை அவ்வளவு எளிதாக யாருக்கும் வராது; இவருக்கு அந்த திறமை உள்ளது...’ என, கர்நாடக மாநில மேல்சபையின் துணைத் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான உமாஸ்ரீ குறித்து பேசுகின்றனர், அங்குள்ள அரசியல் தலைவர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பிரபல நடிகை உமாஸ்ரீ, கன்னடத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தற்போது, மேல்சபையின் துணை தலைவர் என்பதால், தலைவர் இல்லாத நேரங்களில் சபையை நடத்த வேண்டிய பொறுப்பு உமாஸ்ரீக்கு உள்ளது.
இவர், மிகவும் உயரம் குறைவானவர். படங்களில் நடிக்கும்போதே, இது தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டவர். அரசியலிலும், அவரது உயரத்தை வைத்து கிண்டலடிக்கும் போக்கு தொடர்கிறது.
பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றால், ‘மைக்’ எட்டாது என்பதால், சிறிய ஸ்டூல் போட்டு சமாளிப்பார். விழாக்களில் பேசத் தொடங்கும் முன், ‘எங்கு சென்றாலும், கையுடன் ஒரு ஸ்டூலை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது...’ என, நகைச்சுவையாக கூறி கூட்டத்தினரின் கைதட்டல்களை வாங்கி விடுவார்.
‘படங்களில் நடிக்கும்போது சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கினார். இப்போது, அரசியலிலும் எப்படி பேச வேண்டும் என நன்றாகவே கற்றுத் தேர்ந்து விட்டார். இதற்கும், அவருக்கு ஒரு விருது கொடுக்க வேண்டும்...’ என, எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர் கிண்டல் அடிக்கின்றனர்.
