PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

‘பதவியில் இருந்தால் தான் மரியாதை; இல்லையெனில் கடைக்கோடி தொண்டன் கூட மதிக்க மாட்டான் என்பது கண்கூடாக தெரிந்து விட்டது...’ என புலம்புகிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார்.
பீஹார் மாநில முதல்வராக, 19 ஆண்டுகள் பதவி வகித்த பெருமைக்குரியவர் நிதிஷ் குமார். நாட்டில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். கடந்த ஏப்ரலில், கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் காரணமாக, முதல்வர் பதவியை பா.ஜ., வின் சாம்ராட் சவுத்ரிக்கு விட்டுக் கொடுத்தார். நிதிஷுக்கு ஆறுதல் பரிசாக ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கினர்.
முதல்வர் பதவியில்லாத கடந்த ஆறு மாதங்களில், கட்சியில் அவரது செல்வாக்கு படிப்படியாக சரிய தொடங்கியுள்ளது. சமீபத்தில், பீஹார் மேலவை தேர்தலுக்கு ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராக, அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நீரஜ் குமாரை அறிவித்தார், நிதிஷ் குமார்.
ஆனால், அவரது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சிங், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, வேட்பாளரை மாற்றும்படி போர்க்கொடி துாக்கியுள்ளார். மேலும், பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் அனுஜ் சிங்கிற்கு ஆதரவாகவும் ஆனந்த் சிங் பிரசாரம் செய்து வருகிறார்.
இதனால், அதிர்ச்சியில் உள்ள நிதிஷ் குமார், ‘முதல்வராக இருந்தபோது கட்சியில் நான் வைத்தது தான் சட்டம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, ‘டம்மி’யாகி வருகிறேன்...’ என கண்களை கசக்குகிறார்.
