PUBLISHED ON : ஜன 29, 2024 12:00 AM

'என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது...' என கதறுகிறார், மேற்கு வங்க மாநில காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
லோக்சபாவில் காங்கிரஸ் தலைவராக உள்ள இவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசி, கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் எடுத்தவர். சில நேரம் இவரது பேச்சு வரம்பு மீறிப் போய், அது விஸ்வரூபம் எடுத்த பின், அதற்காக மன்னிப்பு கேட்டதும் உண்டு.
இப்போதும் அதுபோன்ற ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. 28 எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரசும் அங்கம் வகிக்கின்றன.
இங்கு லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர், உச்சக்கட்ட வார்த்தை போரில் இறங்கினர்.
'கூட்டணி முறிந்தால், அதற்கு முக்கிய காரணம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியாகத் தான் இருப்பார்...' திரிணமுல் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெயின் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக, டெரக் ஓ பிரெயினை வெளிநாட்டுக்காரர் என, சவுத்ரி விமர்சித்தார். விஷயம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த சவுத்ரி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
'திரிணமுல் தலைவர்கள் என்னை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். நான் சும்மா இருந்தாலும், என் வாய் சும்மாயிருக்காது. பிரச்னைக்கு அது தான் காரணம்...' என புலம்புகிறார், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.