PUBLISHED ON : மே 23, 2026 12:00 AM

'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன; அதற்குள் பிரச்னை ஆரம்பமாகி விட்டதா...' என கிண்டல் அடிக்கின்றனர், மஹாராஷ்டிரா மக்கள்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா தலைவரான ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்., கட்சியின் தலைவியான சுனேத்ரா பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகிக்கின்றனர்.
தேவேந்திர பட்னவிசுக்கு முன், முதல்வராக பதவி வகித்த ஏக்நாத் ஷிண்டே, தற்போது கடும் அதிருப்தியில் உள்ளார். ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், இன்னும் முதல்வர் பதவி மீது அவர் கண் வைத்துள்ளார். இதற்காக, உள்ளடி அரசியலில் ஈடுபடவும் அவர் தயாராகி வருகிறார்.
மற்றொரு துணை முதல்வரான தேசியவாத காங்கிரசின் சுனேத்ரா பவார், சில மாதங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்த தன் கணவர் அஜித் பவாருக்கு, மக்களிடையே உள்ள அனுதாப அலையை பயன்படுத்தி, முதல்வர் பதவியில் அமர்ந்து விட துடிக்கிறார். இதற்காக, இப்போதே அவரது ஆதரவாளர்கள், 'வருங்கால முதல்வர் சுனேத்ரா பவார்...' என, பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதையறிந்த தேவேந்திர பட்னவிஸ், 'முதலில் இந்த கூட்டணி 2029ம் ஆண்டு வரை தொடர வேண்டும். அப்படியே தொடர்ந்தாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதற்குள், இவ்வளவு போட்டியா...?' என புலம்புகிறார்.
