PUBLISHED ON : ஜன 18, 2026 03:46 AM

'என்ன இருந்தாலும், இப்படி பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும்...' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி பற்றி பேசுகின்றனர், இங்குள்ள பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நான்கு முறை முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.
இவர், முதல்வராக இருந்த போது, தடாலடியான அரசியலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், 2012க்கு பின், பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதிலும், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, மாயாவதி இப்போதே தயாராகி வருகிறார். சமீபத்தில் தன் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், 'சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல; இனி வரும் எல்லா தேர்தல்களையும், பகுஜன் சமாஜ் கட்சி தனியாகவே சந்திக்கும்; எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்' என்றிருக்கிறார்.
'ராட்சத பலத்துடன் உள்ள பா.ஜ., கூட, ஓட்டுகள் பிற கூட்டணிக்கு சிதறக்கூடாது என்பதற்காக, சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறது. இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மாயாவதி, இப்படி ஒரு அபாயகரமான முடிவை ஏன் எடுக்கிறார் என தெரியவில்லையே...' என்கின்றனர், பிற அரசியல் கட்சியினர்.

