PUBLISHED ON : ஜூலை 26, 2026 12:44 AM

'மாமியார் உடைத்தால் மண் சட்டி; மருமகள் உடைத்தால் பொன் சட்டியா...?' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து கொதிக்கின்றனர், பஞ்சாப் மாநில பா.ஜ.,வினர்.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து, சமீபத்தில் டில்லியில் போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்ததுடன், 'வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்...' என, கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேள்விப்பட்ட பஞ்சாப் மாநில பா.ஜ., நிர்வாகிகள் ஆவேசம் அடைந்தனர். 'ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தாசில்தார் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, விவசாய அதிகாரிகள் தேர்வு, மருத்துவ பணியாளர்கள் தேர்வு ஆகியவற்றின் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.
'இதனால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதற்கு பதில் சொல்லாத ஆம் ஆத்மி, நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது...' என, குற்றஞ்சாட்டினர்.
பா.ஜ.,வினரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும், அமைதி காப்பதை, அம்மாநில மக்கள் கிண்டல் அடிக்கின்றனர்.
