PUBLISHED ON : ஜூலை 25, 2026 12:29 AM

'வாரிசு அரசியலால் பதவிக்கு வந்தவர் என்ற பெயரை மாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டார்...' என, ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவருமான நாரா லோகேஷ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபுவின் மகன் தான், நாரா லோகேஷ். தனக்குப் பின், கட்சியிலும், ஆட்சியிலும், தன் மகனை முன்நிறுத்தும் நடவடிக்கைகளை ஏற்கனவே சந்திரபாபு துவங்கி விட்டார்.
'தெலுங்கு தேசம் கட்சியில் நாரா லோகேஷ் தவிர, வேறு முக்கிய தலைவர்களே இல்லையா... வாரிசு என்பதற்காக, தன் மகனுக்கு முக்கிய பதவிகளை சந்திரபாபு கொடுத்துள்ளார்...' என, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து, வாரிசு அரசியல்வாதி என்ற அடையாளத்தை மாற்ற வேண்டுமானால், சில திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ள நாரா லோகேஷ், அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள நிறுவனங்களிடம், ஆந்திராவில் முதலீடு செய்ய வரும்படி கோரிக்கை விடுத்து வருகிறார். 'ஆந்திராவில் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து விட்டால், அரசியல் வாரிசு என்ற என் அடையாளம் முற்றிலும் மாறி விடும்...' என்கிறார், நாரா லோகேஷ்.
