PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:27 AM

'பரபரப்பான அரசியல், நிர்வாக விஷயங்களுக்கு இடையில், குடும்பத்தினர் மீதும் ஆர்வம் காட்டினால் தானே, வீட்டில் உள்ளவர்களிடம் நமக்கு மதிப்பு இருக்கும்...' என, தெலுங்கானா காங்கிரஸ் அரசின் முதல்வர் ரேவந்த் ரெட்டி நகைச்சுவையாக கூறுகிறார்.
ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வராக பதவியேற்று, இரண்டரை ஆண்டுகளாகி விட்டன. கட்சி விவகாரங்கள், ஆட்சி தொடர்பான விஷயங்கள் என, எப்போதும் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இதனால், அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மிகவும் அரிதாகி விட்டது. இந்த விஷயத்தில், மனைவி, மகள் போன்றோரின் அதிருப்தியை சமாளித்து விட்டாலும், 3 வயதான பேரன் ரியான்சை அவரால் சமாளிக்க முடியவில்லை.
சமீபத்தில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள தன் வீட்டில் இருந்தார், ரேவந்த் ரெட்டி. அப்போது அவரது பேரன், 'தாத்தா... நீங்கள் என்னுடன் விளையாடுவதே இல்லை. இப்போது என்னுடன் விளையாட வேண்டும்; இல்லையெனில், பூரி சுட்டு தர வேண்டும்...' என, பிடிவாதம் பிடித்தான்.
பேரனை சமாதானப்படுத்த முடியாத ரேவந்த் ரெட்டி, சமையல் அறைக்கு சென்று, பூரிகளை சுட்டு பேரனுக்கு வழங்கினார். அவனும், சந்தோஷமாக சாப்பிட்டான்.
இந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரேவந்த் ரெட்டி, 'சிக்கலான அரசியல் விஷயங்களுக்கு கூட என்னால் எளிதில் தீர்வு கண்டுபிடித்து விட முடியும். ஆனால், இந்த பேரனின் பிடிவாதத்துக்கு தான் தீர்வு காண முடியவில்லை...' என, தெரிவித்துள்ளார்.
