PUBLISHED ON : ஏப் 26, 2026 12:51 AM

'நம்ப வைத்து ஏமாற்றி விட்டனரே...' என, கண்ணீர் வடிக்கிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார்.
பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான, பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த நிதிஷ் குமார், சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்; தற்போது அவர் ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார்.
நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக, அவரது மகன் நிஷாந்த் குமார் நியமிக்கப்படுவார் என்றும், பீஹார் துணை முதல்வராக அவர் பதவியேற்பார் என்றும், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கூறி வந்தனர்.
இதை நம்பிய நிஷாந்த் குமார், ஐக்கிய ஜனதா தளத்தில், அடிப்படை உறுப்பினராக கடந்த மாதம் சேர்ந்தார். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை வலுப்படுத்த போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். செயல் தலைவர், பொதுச் செயலர்கள் என, 24 பேருக்கு பதவிகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இதில் நிஷாந்த் குமார் பெயர் இல்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள நிஷாந்த் குமாரின் ஆதரவாளர்கள், 'ஏற்கனவே எங்கள் தலைவருக்கு துணை முதல்வர் பதவி தருவதாக கூறினர்; அந்த பதவியும் தரவில்லை. தற்போது கட்சியிலும் எந்த பொறுப்பும் தரவில்லை. ஒரு முதுபெரும் தலைவரின் மகனை, சொந்த கட்சியினரே ஏமாற்றலாமா...?' என, விரக்தியுடன் கூறுகின்றனர்.
