PUBLISHED ON : செப் 20, 2026 01:15 AM

'அரசியல் அனுபவம் உள்ள ஒரு தலைவர், சொதப்பலாக பதில் அளிக்கலாமா...?' என, கேரள மின் துறை அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சன்னி ஜோசப் குறித்து, அம்மாநில மக்கள் புலம்புகின்றனர்.
கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மின் துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் தான், சன்னி ஜோசப்.
சமீபகாலமாக, கேரளாவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், சன்னி ஜோசப் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'மின் துறை அமைச்சர் பதவி என்பது முள் கிரீடம் போன்றது...' என்றார். இதை அவர் கூறி முடிக்கும் முன்பே, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அந்த இடமே இருளில் மூழ்கியது.
இதுகுறித்து சன்னி ஜோசப்பிடம் பத்திரிகையாளர்கள், 'அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதற்கு என்ன காரணம்...?' என கேள்வி எழுப்பினர். தர்மசங்கடத்தில் நெளிந்த சன்னி ஜோசப், 'மின்வெட்டுக்கான காரணம் குறித்து அறிக்கை தயார் செய்து வைத்திருந்தேன். அதை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன். இதுகுறித்து பின்னர் விளக்கமாக கூறுகிறேன்...' என சமாளித்தபடி, வேகமாக புறப்பட்டு சென்றார்.
'அமைச்சர் பதவியில் இருப்பவர், இப்படியா பொறுப்பின்றி பதில் சொல்வது...?' என, புலம்பியபடியே பத்திரிகையாளர்கள் நடையை கட்டினர்.
