PUBLISHED ON : மார் 30, 2026 03:41 AM

'இவர் மட்டும் தான், ராகுலுக்கு எதிராக மென்மையான விமர்சனங்களை வைத்தார். இப்போது இவரும், போட்டு தாக்கி விட்டாரா...' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவருமான பினராயி விஜயன் பற்றி கூறுகின்றனர், கேரள மக்கள்.
கேரளாவில், வரும், ஏப்., 9ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுலை, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நிர்வாகிகள் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். ஆனால், முதல்வர் பினராயி விஜயன், வரம்பு மீறாமல் தான் விமர்சிப்பார்.
இந்த முறை, அவரும் ராகுலை கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளார். சமீபத்தில், ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், 'ராகுல் தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் போதவில்லை. எதையும் தெளிவாக புரிந்து கொள்ள அவர் முயற்சிப்பதில்லை. அனுபவத்தில் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொள்வதில்லை.
'இத்தகைய பண்புகள் ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல. காங்கிரசின் முக்கிய தலைவரிடம், இத்தனை குறைபாடுகள் இருப்பது கவலைக்குரியது...' என்றார்.
ஆனால், 'பினராயி விஜயனுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான், ராகுலை கடுமையாக விமர்சிக்கிறார்...' என்கின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள்.
