PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

'பங்காளி சண்டையாவது ஒரு அளவுக்கு மேல் முடிவுக்கு வந்து விடும்; இவர்களது சண்டைக்கு முடிவே இல்லை போலிருக்கிறதே...' என, பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
பா.ஜ.,வில் தேசிய செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் பலர் உள்ளனர். எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது, அவர்களது குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பது இவர்களது வேலை.
ஆனால், இவர்களை விட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தான், இந்த வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அதிலும், காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோயை விமர்சிப்பது என்றால், சர்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல.
இவர்கள் இருவருமே அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான், இதில் கவனிக்க வேண்டிய விஷயம். 'கவுரவ் கோகோயும், அவரது மனைவியும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள். இவர்கள், ரகசியமாக அடிக்கடி பாகிஸ்தான் சென்று வருகின்றனர்...' என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார், சர்மா.
இதற்கு பதிலடியாக, 'ஹிமந்த பிஸ்வ சர்மாவும் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்தவர் தான். பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்து விட்டு போனவர். துரோகிகளுக்கு எந்த ஜென்மத்திலும் மன்னிப்பு கிடையாது...' என, ஆவேசமாக கூறி வருகிறார், கவுரவ் கோகோய்.
'இவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. பொழுது விடிந்தால் இவர்களது புலம்பல் ஆரம்பமாகி விடுகிறது...' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், அசாம் மக்கள்.