PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

'ஒவ்வொரு முறை சம்மன் வரும்போதும், மனது பதறுகிறது...' என்கின்றனர், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர்.
காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, பீஹாரைச் சேர்ந்த பலரிடம், அவரது குடும்பத்தினர், நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது; இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் நடந்த பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகனும், தற்போதைய பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் என, ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கியுள்ளது.
தற்போது இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பியும், அவர்கள் ஆஜராகவில்லை. இதனால், லாலு உள்ளிட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாக டில்லியில் பரவலாக பேசப்படுகிறது. லாலு, ஏற்கனவே வயது மூப்பு மற்றும்பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்.
ஏற்கனவே, கால்நடை தீவன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நெருக்கடியான நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டால், என்னாகுமோ என, அவரது குடும்பத்தினர் பயப்படுகின்றனர்.
அதே நேரம், 'உப்பை தின்றால், தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்...' என்கின்றனர், லாலுவின் அரசியல் எதிரிகள்.