PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

'வாரிசுக்கு வாய்ப்பு வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது போல்இருக்கிறதே...' என புலம்புகிறார், மத்திய விவசாய துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான்.
மத்திய பிர தேசத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சவுகான். 16 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.
ஆனால், கடந்த முறை நடந்த ம.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றபோதும், இவரை முதல்வராக நியமிக்காமல், புதுமுகமான மோகன் யாதவை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம்.
இதனால் விரக்தியில் இருந்த சவுகானை, மத்திய அமைச்சராக்கி ஆறுதல் படுத்தினர் கட்சி தலைவர்கள். நவ., 13ல் நடக்கவுள்ள ம.பி.,யின் புதானி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தன் மகன் கார்த்திகேயாவை போட்டியிட வைக்க முட்டி மோதினார், சவுகான்.
இந்த தொகுதியில் சவுகான், ஆறு முறை வெற்றி பெற்றவர் என்பதால், தனக்கு பின், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, தன் மகன்இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.
ஆனாலும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்காந்த் பார்கவாவை வேட்பாளராக அறிவித்து விட்டது, பா.ஜ., மேலிடம்.
இதனால், கவலையில் மூழ்கியுள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், 'என் குடும்பத்துக்கும், அரசியலுக்கும்உள்ள தொடர்பு, என்னுடன் முடிந்து விடும் போலிருக்கிறது...' என, நொந்து போயிருக்கிறார்.

