PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

'இவருக்குள் இவ்வளவு திறமையா...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.
மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததும், யாரும் எதிர்பாராத வகையில் மோகன் யாதவுக்கு முதல்வர் பதவியை அளித்து ஆச்சரியப்படுத்தியது, பா.ஜ., மேலிடம்.
சமீபத்தில், உத்தர பிரதேச மாநிலத்துக்கு மோகன் யாதவ் சென்றிருந்தார். லக்னோவில் அவரை வரவேற்பதற்காக, பிரமாண்ட ஏற்பாடுகளை அங்குள்ள யாதவ சமூகத்தினர் செய்திருந்தனர். தன்னை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களை பார்த்ததும், மோகன் யாதவுக்கு தலைகால் புரியவில்லை.
மைக்கை பிடித்த அவர், பிரதமர் மோடியை புகழும் வகையில், தாள நயத்துடன் பாட்டு பாடி அசத்தினார். இதற்கு பெரும் கைதட்டல் கிடைத்தது. இது குறித்து, தன் ஆதரவாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், 'பாடல்கள் பாடுவது எனக்கு பொழுது போக்கு. ஆனால், மேடையில் பாடிய அனுபவம் இல்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை.
'இந்த கூட்டத்தை பார்த்ததும், என்னை அறியாமல் பாடி விட்டேன். குரல் வளம் அவ்வளவு மோசம் இல்லையே...' என சிரித்தபடியே கேட்டார்.
ஆதரவாளர்களோ, 'நன்றாக பாட மட்டுமல்ல, பேசவும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது...' என, 'ஐஸ்' வைத்தனர்.
