PUBLISHED ON : ஜூலை 02, 2026 01:01 AM

'எப்படியாவது, மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலும்...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி, 2024ல் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தது. அதற்கு முன்னும், இந்த கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது.
ஆனால், அப்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வ ராக இருந்தார். 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், முதல்வர் பதவியை பட்னவிசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஷிண்டேவுக்கு ஏற்பட்டது.
இப்போது மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம், அவரது மனதில் ஊறிப் போயுள்ளது. இதற்காக, தன் மகனும், லோக்சபா எம்.பி.,யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவை, களத்தில் இறக்கி விட்டுள்ளார். அவரும், தந்தையை, முதல்வராக்குவதற்காக இப்போதே வியூகங்களை வகுத்து வருகிறார்.
'வரும் 2029ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதிக இடங்களில் நாம் வெற்றி பெற்றால், நீங்கள் தான் முதல்வர்...' என, தந்தையை உசுப்பேற்றி விட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
இதனால், இப்போதே முதல்வர் கனவில் மிதக்கிறார் ஏக்நாத் ஷிண்டே.
