PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

'இப்படி ஒரு கேள்வி வரும் என, சந்திரபாபு நாயுடு கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்...' என, ஆந்திர மாநில எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவை, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார்.
ஆனால், ஆந்திராவில் மக்கள் தொகை குறைவாக இருப்பது, பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சந்திரபாபு நாயுடு கருதுகிறார். இதையடுத்து, சமீபத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 'மூன்றாவது குழந்தை பெறும் தம்பதிக்கு 30,000 ரூபாயும், நான்காவது குழந்தை பெறும் தம்பதிக்கு 40,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்' என, அறிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு ஆச்சரியம் அளிப்பதாக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, 'அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி, மக்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்துகிறார். ஆனால், அவருக்கு நாரா லோகேஷ் என்ற ஒரு மகன் மட்டுமே உள்ளார். நாரா லோகேஷுக்கும் ஒரு ஆண் குழந்தை மட்டுமே உள்ளது. ஊருக்கு உபதேசம் செய்வதை, சந்திரபாபு நாயுடு முதலில் நிறுத்த வேண்டும்...' என, கிண்டல் அடிக்கிறார்.
