PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

'என்ன தான் தொழில்நுட்பம், சமூக சீர்திருத்தம், புதுமை என பேசினாலும், தானும் சராசரி அரசியல்வாதி தான் என்பதை நிரூபித்து விட்டார் பார்த்தீர்களா...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து பேசுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். தற்போது அவருக்கு, 75 வயதாகிறது. இதற்கு மேலும், தீவிர அரசியலில் தாக்குப்பிடிக்க, தன் உடல்நிலை ஒத்துழைக்காது என அவருக்கு நன்கு தெரியும்.
இதையடுத்து, தன் அரசியல் வாரிசாக, தன் மகனும், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான நாரா லோகேஷை அறிவிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார், சந்திரபாபு நாயுடு.
சமீபத்தில், கடப்பா நகரில் நடந்த, தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில், நாரா லோகேஷுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கு சமமாக, கட்சி நிர்வாகிகள், நாரா லோகேஷுக்கும் மரியாதை அளித்தனர்.
'அடுத்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்தப் போவது நாரா லோகேஷ் தான்; அதற்கான அரங்கேற்றம் இப்போது நடந்து முடிந்துள்ளது...' என்கின்றனர், அந்த கட்சியினர்.
'ஊருக்குத் தான் சந்திரபாபு நாயுடு உபதேசம் செய்கிறார்...' என சொல்கின்றனர், ஆந்திர மாநில அரசியல்வாதிகள்.