PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

'ஏற்கனவே கட்சியில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவராக வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர். இதில், குடும்ப சண்டை வேறா...' என புலம்புகின்றனர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தொண்டர்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானா தனி மாநிலமாக உருவானதில் இருந்து, அங்கு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு, இப்போது நேரம் சரியில்லை.
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் என வரிசையாக தோல்விகளை சந்தித்து வருகிறார். 'வழக்குகள், தோல்விகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பா.ஜ., கூட்டணியில் இணைவது தான் நல்லது' என, சந்திரசேகர ராவ் கருதுகிறார்.
தன் மகன் கே.டி.ராமாராவை அரசியல் வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் தயாராகி வருகிறார். ஆனால் இந்த முயற்சிகளுக்கு, சந்திரசேகர ராவின் மகள் கவிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 'கட்சிக்காக சிறை சென்ற என்னை ஒதுக்கி வைத்தால், கட்சியை இரண்டாக உடைக்கவும் தயங்க மாட்டேன். எனக்கென பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் உள்ளது...' என, தந்தைக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துஉள்ளார், கவிதா.
பாரத் ராஷ்ட்ர சமிதி தொண்டர்களோ, 'கட்சி பல பிரிவுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகின்றனர்.