PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM

'சமாஜ்வாதி கட்சியின் கோட்டையை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் போலிருக்கிறது...' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கன்னோஜ் லோக்சபா தொகுதி, சமாஜ்வாதியின் இரும்பு கோட்டை யாக திகழ்ந்து வந்தது. 1999ல் இருந்து, இங்கு முலாயம் சிங் குடும்பத்தினர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.
ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் அகிலேஷின் மனைவி டிம்பிள், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்தார். இதையடுத்து, மெயின்புரி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிம்பிள் வெற்றி பெற்றார்.
இந்த முறை கன்னோஜ் தொகுதியை பா.ஜ., விடம் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார், அகிலேஷ் யாதவ். வெற்றியை தக்க வைப்பதற்காக, இந்த முறை, தானே அந்த தொகுதியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, கடந்த சில மாதங்களில் மட்டும், 12க்கும் மேற்பட்ட முறை, இந்த தொகுதிக்கு வந்து சென்றுள்ளார். இதையறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், கன்னோஜ் தொகுதிக்கு வந்து, 352 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சென்றுள்ளார்.
'சபாஷ்... சரியான போட்டி...' என்கின்றனர், உ.பி., அரசியல்வாதிகள்.

