PUBLISHED ON : மே 30, 2025 12:00 AM

'யார் சொல்வதை நம்புவது என தெரியவில்லையே... ஒரே குழப்பமாக இருக்கிறதே...' என, கவலைப்படுகிறார், காங்கிரஸ் லோக்சபா எம்.பி., சசி தரூர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டவர், சசி தரூர். காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு தடுமாற்றம் நிலவுகிறது. மத்திய பா.ஜ., அரசை ஆதரித்து அவ்வப்போது அவர் கருத்து தெரிவிப்பதால், காங்கிரஸ் கட்சியினர் அவரை ஓரம் கட்டி வைத்திருந்தனர்.
இதனால் கடுப்பான சசி தரூர், சமீபத்தில், 'ஆப்பரேஷன் சிந்துார்' விவகாரத்தில், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். மத்திய அரசு வெளிநாடுகளுக்கு அனுப்பிய குழுவிலும் சசி தரூர் இடம் பெற்றுள்ளார். இதனால், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், 'அதுவரை சசி தரூர் பொறுமையாக இருக்க மாட்டார்; பா.ஜ.,வில் இணைந்து விடுவார்...' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், 'சசி தரூரின் திறமைக்கு, பா.ஜ.,வில் மிகப்பெரிய பதவி காத்திருக்கிறது...' என்றும் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினரோ, 'எங்கள் கட்சியில் இருந்துகொண்டே, பா.ஜ.,வுக்கு ஜால்ரா போட்ட பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத் போன்றவர்கள் நடுத்தெருவில் தான் நின்றனர். சசி தரூருக்கும் அதே கதிதான்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.