PUBLISHED ON : ஜன 24, 2026 12:00 AM

'எப்போது தான் இவர்களுக்கு பொறுப்பு வரும் என தெரியவில்லையே...' என்று புலம்புகிறார், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங்.
பத்திரிகையாளர்களுக்கும், தனக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவதற்கும், தன் இலாகா தொடர்பான தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கும், சமீபத்தில், டில்லியில் உள்ள தன் வீட்டில், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், அமைச்சர் ஜிதேந்திர சிங்.
மதிய உணவு நேரத்தில் சந்திப்பு நடத்த திட்டமிட்டிருந்ததால், பத்திரிகையாளர்களுக்காக சுவையான மதிய உணவையும், அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார். சரியாக, பகல் 1:00 மணிக்கு வரும்படி பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. அமைச்சரும் முன்கூட்டியே வந்து காத்திருந்தார். ஆனால், பத்திரிகையாளர்கள் யாருமே வரவில்லை.
மதியம், 2:00 மணிக்கு மேல் தான், ஒவ்வொருவராக வந்தனர். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பத்திரிகையாளர்களை வரவேற்றார், அமைச்சர் ஜிதேந்திர சிங்.
'அமைச்சர் எப்போதுமே நேரம் தவறாமையை கண்டிப்பாக பின்பற்றுபவர். குறிப்பிட்ட நேரத்தில் யாரும் வராவிட்டால் கோபம் வந்துவிடும். ஆனால், அதை பத்திரிகையாளர்களிடம் காட்ட முடியாதே... அதனால் தான், அமைச்சர் டென்ஷனாக இருக்கிறார்...' என்றனர், ஜிதேந்திர சிங் வீட்டு ஊழியர்கள்.

