PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

'அமைதியான அரசியல்வாதியான இவரையே ஆத்திரப்பட வைத்து விட்டனரே...' என, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
கேரளாவைச் சேர்ந்தவரான வேணுகோபால், காங்கிரசின் அதிகாரமிக்க பொதுச் செயலர் களில் ஒருவர். சோனியா, ராகுல், பிரியங்கா போன்ற காங்., மேலிட தலைவர்களிடம் நேரடியாக பேச முடியாதா என, கட்சியைச் சேர்ந்த பலருக்கும் ஏக்கம் இருக்கும்.
ஆனால், வேணுகோபால் நினைத்த நேரத்தில் இவர்களிடம் பேசுவார். சோனியா, ராகுல் ஆகியோரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திக்க வேண்டுமானாலும், வேணுகோபாலைத் தான் முதலில் அணுக வேண்டும். காங்கிரசில் இவ்வளவு அதிகாரம் உடைய தலைவராக இருந்தாலும், வெளியில் அவர் அதிகம் தலைகாட்டுவது இல்லை.
காங்கிரஸ் சார்பில் முக்கிய அறிக்கை வெளியிடுவது, பார்லிமென்டில் காரசாரமாக பேசுவது என, எதிலுமே தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட வேணுகோபால், சமீபத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளித்து அறிக்கை வெளியிட்டார்.
'தேர்தல் ஆணையம், தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்பு. ஆனால், வாக்காளர் பட்டியலில் நடக்கும் முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்லாமல், ஆவேசமாக அறிக்கை வெளியிடுகிறது. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு...' என்று, அதில் குறிப்பிட்டிருந்தார்.
டில்லியில் உள்ள அரசியல்வாதிகளோ, 'தேர்தல் ஆணைய அதிகாரிகள், வேணுகோபாலையே கொந்தளிக்க வைத்து விட்டனரே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.