PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM
அமைதிக்கு அணு
அணு என்பது மிகச்சிறியது. கண்களால் பார்க்க முடியாது. அணுவில் இருக்கிற அணுக்கரு அதைவிட மிகச்சிறியது. அணுக்கருவில் தான் புரோட்டான், நியூட்ரான் துகள்கள் உள்ளன. அணுக்கருவில் இருந்து தொலைவில் எலக்ட்ரான் உள்ளது. அணுசக்தியை அமைதி, ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துதல், அணுகுண்டு உள்ளிட்ட அணுசக்தியை ராணுவத்தில் பயன்படுத்துவதை தடுக்கவும் சர்வதேச அணுசக்தி முகமை ( ஐ.ஏ.இ.ஏ.,) 1957 ஜூலை 29ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் ஆஸ்திரிய தலைநகர் வியன்னா. ஐ.நா., வின் கீழ் செயல்படுகிறது.
தகவல் சுரங்கம்
நிமிடத்துக்கு ஐந்து ரயில்
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ளது 'கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்' ரயில் நிலையம். இது பிளாட்பார்ம் எண்ணிக்கை (44) அடிப்படையில் உலகின் பெரிய ரயில் நிலையம். 67 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 41 ரயில் பாதைகள் மேல் தளத்திலும், 26 ரயில் பாதைகள் கீழ் தளத்திலும் உள்ளன. பிசியான நேரத்தில் 20 விநாடிக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. பரப்பளவு 48 ஏக்கர். 1903ல் பணி துவங்கி 1913ல் திறக்கப்பட்டது. பின் 1994, 2000ல் விரிவுபடுத்தப்பட்டது. ஆண்டுக்கு 6.70 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

