/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
முறையாக நிறுத்தப்படும் ரயில் திருவாலங்காடு பயணியர் மகிழ்ச்சி
/
முறையாக நிறுத்தப்படும் ரயில் திருவாலங்காடு பயணியர் மகிழ்ச்சி
முறையாக நிறுத்தப்படும் ரயில் திருவாலங்காடு பயணியர் மகிழ்ச்சி
முறையாக நிறுத்தப்படும் ரயில் திருவாலங்காடு பயணியர் மகிழ்ச்சி
PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் சென்று வருகின்றன.
அனைத்து புறநகர் ரயில்களும் நின்று செல்லும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணியர் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த மார்க்கத்தில் பயணியர் அதிகரிப்பு காரணமாக, ஒன்பது பெட்டி ரயில்களுக்கு பதிலாக, ரயில்வே நிர்வாகம் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கி வருகிறது.
திருவாலங்காடு ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில், 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் போது, கடைசி பெட்டியின் பெரும்பகுதி, நடைமேடைக்கு வெளியே நிற்கிறது.
இதனால், இந்த பெட்டியில் பயணிப்போர், முன்பக்கம் உள்ள ஒரு வழியை மட்டுமே ஏறவும், இறங்கவும் பயன்படுத்துகின்றனர். சிலர், நடைமேடை இல்லாததால் குதித்து இறங்கி செல்கின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் ரயில் நடைமேடையில் நிற்கிறதா, இல்லையா என்று தெரியாமல், பயணியர் குழப்பம் அடைகின்றனர். சிலர், அறியாமல் இறங்கும் போது காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, ரயில் நிலையத்தில் முறையாக பயணியர் இறங்கி செல்லும் வகையில் பெட்டி நிறுத்தப்படுகிறது.