PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதாக, சட்டசபை தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை முதலில் முதல்வர் விஜய் நிறைவேற்ற வேண்டும். மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, போதைப் பொருட்கள் விற்பனை, குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு பாதிப்பை கண்டித்து, வரும் 4ம் தேதி என் தலைமையில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
டவுட் தனபாலு: பா.ஜ., மாநிலத் தலைவரான நீங்க, சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்துவது தானே பொருத்தமா இருக்கும்... சென்னையில ஆர்ப்பாட்டம் நடத்தினா கூட்டம் கூடாதுன்னு பயந்து போய், சொந்த பந்தங்கள் நிறைஞ்சிருக்கும் உங்க சொந்த ஊரில் போய் ஆர்ப்பாட்டம் நடத்துறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
lll
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: முதல்வர் விஜய், 'உங்கள் அண்ணனாக இருப்பேன்; மாமனாக இருப்பேன்' என பச்சைப்பொய் பேசுகிறார். முதல்வர் விஜய்க்கு உண்மையிலேயே பாசம் இருந்தால், தாய், தந்தை, கட்டிய மனைவி, பிள்ளைகளுடன் வாழ வேண்டும்; வெறும் வசனம் பேசினால் போதாது; நிஜத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும். குடும்பம் குறித்து பேச விஜய்க்கு தகுதியே இல்லை.
டவுட் தனபாலு: முதல்வர் விஜய் யார் கூட வாழணும் என்பதை, நீங்க எப்படி முடிவு பண்ண முடியும்...? அவரது தனிப்பட்ட வாழ்க்கையால, அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டா மட்டும் தான் நீங்க கேள்வி கேட்கலாம்... இந்த எளிய உண்மை கூட, மூத்த அரசியல் தலைவரான உங்களுக்கு தெரியாதா அல்லது எல்லாம் தெரிஞ்சும், அரசியலுக்காக இப்படி பேசுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சீருடையில், மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பள்ளி மாணவர்களுக்கு சட்டைக்கு பதிலாக, 'டி - ஷர்ட்' கொண்டு வரலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
டவுட் தனபாலு: 'டி - ஷர்ட்' என்ன... முதல்வர் விஜய் பாணியில் மாணவர்களுக்கு, 'கோட் - சூட்' கூட கொடுங்க... யாரும் வேண்டாம்னு சொல்லப் போறதில்லை. அதேநேரம், அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் மூலம், தரமான கல்வி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்தால், 'டவுட்' இல்லாம தங்களை பாராட்டலாம்!
lll
