PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: கட்சிப் பணி, மக்கள் பணிகளில் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர் முன்னாள் அமைச்சர் நேரு. எனக்கும் அவர் தான் வழிகாட்டியாக இருக்கிறார். கட்சிக்கு எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு நேரு உதாரணம்.
டவுட் தனபாலு: நேரு மட்டுமா...? சென்னைக்கு சேகர் பாபு, திருவண்ணாமலைக்கு வேலு, விழுப்புரத்துக்கு பொன்முடி, மதுரைக்கு மூர்த்தின்னு மாவட்டத்துக்கு ஒரு தளபதியை உருவாக்கி வச்சிருக்கீங்களே... ஆனா, இந்த தளபதிகள் எல்லாம் காலா காலத்துக்கும் தளபதிகளாவே இருந்து உங்க குடும்பத்துக்கு சேவை செய்யணும்... கட்சியின் தலைமை பீடம், ஆட்சி யின் தலைமை பீடத்துக்கு மட்டும் அவங்களால வர முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தி.மு.க., இனி ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இப்போது தேர்தல் வந்தால், முதல்வர் விஜய் கூடுதலாக 30 தொகுதிகளில் வெற்றி பெறுவார். அவருக்கு ஆதரவாக, நானும், ம.தி.மு.க.,வினரும் தெருத்தெருவாக பிரசாரம் செய்வோம்.
டவுட் தனபாலு: உங்க கருத்தை பார்த்தால், ஆட்சியை கலைச்சிட்டு மறுபடியும் தேர்தல் வைக்கணும்... த.வெ.க., கூட்டணி யில் உங்க கட்சிக்கு கணிசமான, 'சீட்'களை வாங்கணும்... விஜய் புண்ணியத்தில் ஜெயிச்சு, புதுசா அமையும் அவரது அமைச்சரவையில் சேரணும்னு பகல் கனவு காணுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: துாய சக்தி எனக் கூறி கொடுமையான ஆட்சியை, இன்றைக்கு த.வெ.க., நடத்திக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை முதன் முதலில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி வெளிப்படுத்தினார். அதன்பின்பே, அது வெளியே தெரியவந்தது. ஆனாலும், முதல்வர் விஜய் வாய் திறக்க மறுக்கிறார். சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், 'அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்கிறார். இப்படி தான் இந்த ஆட்சி நடக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட, விரைவில் நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. விரைவில் தி.மு.க., ஆட்சி அமையும். அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: த.வெ.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாசங்கள் தான் ஆகுது... அதுக்குள்ள, 'விரைவில் தி.மு.க., ஆட்சி அமையும்'னு எப்படி இவ்வளவு நம்பிக்கையா பேசுறீங்க... த.வெ.க., தரப்பு குற்றஞ்சாட்டுவது போல, அந்தக் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபடுறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
