PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்: திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில், ‘முதல்வருக்கு அரோகரா’ என முழக்கம் எழுப்பியது குறித்து, ஏற்கனவே பாடகர்கள் விளக்கம் அளித்து விட்டனர். ‘முதல்வரும், நாங்களும், எப்போதும் புகழ் பாடுவதை விரும்புவது இல்லை’ என பாடகர்களிடம் கூறினோம். இனி வரும் காலங்களில் கவனமாக செயல்படுவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
டவுட் தனபாலு: அதாவது, ‘புகழ் பாடுவதை நாங்க விரும்ப மாட்டோம்’னு வெறும் வாய் வார்த்தையா சொன்னா மட்டும் போதாது... அப்படி புகழ் பாடியவங்க பதவிகளை பறிச்சு, அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அடுத்து புகழ் பாடுறதுக்கு பலரும் யோசிப்பாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: நாங்கள் எந்த கட்சியுடனும் மறைமுக கூட்டணியில் இல்லை. தேவைப்பட்டால் நேரடியாகவே கூட்டணி அமைப்போம். முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்ப்பது போலவே, தி.மு.க.,வையும் பா.ஜ., எதிர்க்கிறது. தி.மு.க., – பா.ஜ., கூட்டணி நிச்சயமாக இல்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ; கை உயர்கிறதோ இல்லையோ; தாமரை மலர்ந்தே தீரும்.
டவுட் தனபாலு: சட்டசபை தேர்தல் நேரத்தில், உங்க கூட்டணியில் இருந்த அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் இப்பவும் உங்க கூட்டணியில் தான் இருக்காங்களா, இல்லையா என்பதே பெரிய, ‘டவுட்’டா இருக்கு... முதல்ல அதை உறுதிப்படுத்திட்டு, அப்புறமா புதிய கூட்டணி பற்றி பேசினா என்ன என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருது!
lll
பீஹாரில் செயல்படும் லோக்ஜன சக்தி கட்சி தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான்: உ.பி., சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட, எங்கள் கட்சி தயாராகி வருகிறது. பா.ஜ., உடன் கூட்டணி வைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு எடுக்கப்படும். கூட்டணி முடிவாகாவிட்டால், தனித்து களமிறங்குவோம்.
டவுட் தனபாலு: பீஹார்ல மொத்தமுள்ள 243 தொகுதிகள்ல, 2025ல் நடந்த சட்டசபை தேர்தல்ல, உங்க கட்சி வெறும், 19 இடங்களில் தான் ஜெயிச்சிருக்கு... இதுல, பக்கத்து மாநிலமான உ.பி.,யில் 403 தொகுதிகள்லயும் தனியா களமிறங்கப் போறீங்களா... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போன கதையா தான் உங்க சவாலும் இருக்கு என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
