PUBLISHED ON : நவ 24, 2026 12:00 AM

த.வெ.க., கூட்டணியில் உள்ள வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தெளிவான முடிவு எடுக்காமல், இடைக்கால தீர்ப்பாக, ‘அங்கும் தீபம் ஏற்றலாம்; இங்கும் தீபம் ஏற்றலாம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், ‘ரிட்’ மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை; உச்ச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை கட்டாயம் செயல்படுத்தக் கூடாது.
டவுட் தனபாலு: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்து, அமைச்சராக பதவியேற்ற நீங்களே, ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூடாது’ன்னு பேசலாமா... அதையும் மீறி பேச விரும்பினால், அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு உங்க கொள்கையை முழங்கினா என்ன என்ற, ‘டவுட்’ வருதே!
lll
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: கடந்த 2014 லோக்சபா தேர்தலில், ஒரு எம்.பி., கூட பெற முடியாமல், 4.37 சதவீத ஓட்டுகளுடன் தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால், 2016ல் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வாசலில் போய் கூட்டணிக்கு கையேந்தி நின்றது தான், காங்கிரசின் அரசியல் சுயமரியாதையா?
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... தி.மு.க., முதுகில் சவாரி செய்தே, எம்.பி.,க்கள் – எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளை அனுபவிச்ச காங்கிரசார், தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றுப்போன மறுநாளே, ஆளுங்கட்சியான த.வெ.க.,வுக்கு ஓடிப் போய், அமைச்சரவையிலும் இடம் பிடிச்சிட்டாங்களே... அரசியல் சுயமரியாதையை காங்கிரசார் மறந்து வெகுகாலம் ஆகிடுச்சு என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
த.வெ.க., கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: த.வெ.க., அரசு தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. தமிழக விவசாயிகளை பாதிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்டால், முழுமையாக எதிர்ப்போம்; மேகதாதுவில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க விட மாட்டோம். இது தான், காங்கிரசின் உறுதியான நிலைப்பாடு.
டவுட் தனபாலு: உங்க உறுதியான நிலைப்பாடு பத்தி இங்க பேசி எந்த பிரயோஜனமும் இல்லை... நீங்க டில்லி போய் சோனியா, ராகுலை பார்த்து, ‘கர்நாடக முதல்வர் சிவகுமார் முயற்சிகளுக்கு கடிவாளம் போடுங்க’ன்னு வலியுறுத்தினா மட்டுமே, மேகதாது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
