தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/‘டவுட்’ தனபாலு: நவ. 29

‘டவுட்’ தனபாலு: நவ. 29

‘டவுட்’ தனபாலு: நவ. 29


PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு: த.வெ.க., ஆட்சியில் நடக்கும் தவறுகளை மடைமாற்றுவதற்காக, தி.மு.க.,வினர் மீது தினம் ஒரு கைது நடவடிக்கை, தினம் ஒரு பொய் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தி.மு.க., எதற்கும் கவலைப்படும் கட்சியல்ல; அரசியல் களத்தில் தொடர்ந்து உறுதியுடன் நிற்கும். சென்னை கொளத்துார் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார்.

டவுட் தனபாலு: சட்டசபை தேர்தல்ல, உங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்துார் தொகுதிக்கு நீங்க தான் பொறுப்பாளரா இருந்தீங்க... ஆனா கொளத்துாரை கண்டுக்காம, நீங்க போட்டியிட்ட துறைமுகத்தில் மட்டும் கவனம் செலுத்தி, நீங்க மட்டும் கரையேறிட்டு, ஸ்டாலினை கவுத்துட்டீங்க... அதனால, உங்களை எல்லாம் நம்பி மறுபடியும் கொளத்துார்ல ஸ்டாலின் களமிறங்குவாரா என்பது, ‘டவுட்’ தான்!

lll

அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவிப்பு: த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சி நிர்வாகிகளும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர். பெண் கலெக்டருக்கே கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், நீதிமன்றம் சென்ற பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனு அளிக்க வந்தவரை, துணை சபாநாயகர் தாக்கியுள்ளார். இவற்றை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் டிச., 2ம் தேதி காலை, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.,வை தாண்டி, பொறுப்பான எதிர்க்கட்சி என்ற பெயரை எடுக்க பார்ப்பது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... அதேநேரம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கனவே சொன்னது மாதிரி, அந்த கட்சியில் இருக்கும் இரண்டு கோடி தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கிட்டு, தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைப்பாங்களா என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருது!

lll

த.வெ.க., கூட்டணியில் உள்ள வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு, அத்தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், பாதிக்கப்பட்டவரின் பக்கம் தமிழக அரசு நிற்கிறது; வி.சி.க., நிலைப்பாடும் அதுவே. சரியான பாதையில் விசாரணை நடக்கிறது.

டவுட் தனபாலு: பாதிக்கப்பட்டவர் பக்கம் அரசு நிற்கிறது என்றால், கலெக்டர் புகார் குடுத்த ஜூலை மாதமே, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுத்திருக்கணுமே... விவகாரம், உயர் நீதிமன்றம் வரைக்கும் போகும் வரை அரசு மவுனமா இருந்தது ஏன் என்ற, ‘டவுட்’ எழுதே!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us