PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: எத்தனை போராட்டக்காரர்களை மத்திய பா.ஜ., அரசால் கைது செய்ய முடியும்; எத்தனை இளைஞர்களின் குரல்களை ஒடுக்க முடியும்? கரப்பான்பூச்சி கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷுக்கு ஆதரவாக இருப்போம். அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்க தி.மு.க., தயாராக உள்ளது. எவ்வளவு அதிகமான இளைஞர்களை சிறையில் அடைக்கின்றனரோ, அவ்வளவு அதிக எதிர்ப்பு குரல் எழும்பும்.
டவுட் தனபாலு: நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, வாஜ்பாய்னு பல தேசிய தலைவர்களுடன் அரசியல் செய்த நீங்க, நேத்து முளைச்ச கரப்பான் கட்சியுடன் சேர்ந்து அரசியல் செய்யும் அளவுக்கு இறங்கிட்டீங்களே... சட்டசபை தேர்தல்ல, முதல்வர் விஜயை ஒரு பொருட்டாகவே மதிக்காத உங்களுக்கு இதுவும் வேணும், இன்ன மும் வேணும் என்பதில், ‘டவுட்’டே இல்லை!
lll
தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரகுபதி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி போராடியதால், டில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் கைது செய்யப்பட்டதை, எங்கள் கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டித்தார். தமிழகத்தில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க., நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு கரம் நீட்டினர். ஆனால், முதல்வர் விஜய், சென்னையில் ராகுலுடன் காபி அருந்தி கொண்டிருந்தார்.
டவுட் தனபாலு: ஞானேஷ் குமாரை கண்டித்து டில்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காம, தி.மு.க., நழுவியது ஏன்...? மத்திய பா.ஜ., அரசின் கோப பார்வைக்கு ஆளாகிட்டா, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள்ல நெருக்கடி அதிகரிக்கும்னு பயந்து போய் பதுங்கிட்டீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி: தமிழகம் ஏற்கனவே, 13 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் நிலையில், 5 – 7 ரூபாய்க்கு வாங்க வேண்டிய 1 யூனிட் மின்சாரத்தை, ஏழு மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவது நியாயமா? இதில், மிகப்பெரிய முறைகேடு நடந்ததாகவே தெரிகிறது. எனவே, தற்போதைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, குறைந்த விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: நாடு முழுக்க நிறைய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன... வெளிப்படையான, ‘டெண்டர்’ வெளியிட்டால், போட்டிகள் அதிகமாகி மின்சாரத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கே... த.வெ.க., அரசு இதை சிந்திக்காதது ஏன் என்ற, ‘டவுட்’ எழுதே!
lll
