PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

முன்னாள் அமைச்சரும், கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வுமான , ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி: அ.தி.மு.க.,வுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எம்.எல்.ஏ.,க்களின் கருத்துக்களை கேட்கவும், அனைவரையும் அரவணைத்து செல்லவும் பொதுச்செயலர் பழனிசாமி தயாராகவே இருக்கிறார்; பொதுக்குழுவை உரிய நேரத்தில் கூட்டுவார். கட்சி நலனுக்காக எந்த தியாகமும் செய்ய பழனிசாமி தயார்.
டவுட் தனபாலு: கட்சிக்காக பழனிசாமி எந்த தியாகமும் செய்ய வேண்டாம்... கட்சியின் மற்ற முன்னணி தலைவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே போதுமே... ஆனா அதை செய்யாம இருக்கிறதால, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட உயர்ந்த தலைவரா தன்னை நினைச்சிட்டு இருக்காரோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ், தன் கையாலாகாத்தனத்தை மறைக்க, தேர்தல் கமிஷன் மீதும், எஸ்.ஐ.ஆர்., மீதும் பழி போடுகிறது. அவர்களுடன் இணைந்து, எஸ்.ஐ.ஆருக்கு எதிரான நிலைப்பாட்டை முதல்வர் விஜய் எடுப்பது, மிகப்பெரிய அரசியல் பிழை. ‘எஸ்.ஐ.ஆருக்கு பின் பதவிக்கு வந்தவர்கள் சட்டவிரோதமாக ஆட்சியை பிடித்தவர்கள்’ என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும் கருத்தை த.வெ.க., ஏற்கிறதா? அப்படியானால், அதை ஒப்புக்கொண்டு முதல்வர் விஜய் பதவி விலகத் தயாரா?
டவுட் தனபாலு: விஜயை விடுங்க... தமிழகத்துடன் சேர்த்து தானே, நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடந்துச்சு... அங்க, கம்யூ., ஆட்சியை வீழ்த்தி காங்., தானே ஆட்சிக்கு வந்திருக்கு... கேரள காங்., முதல்வரையும் கார்கே பதவி விலக சொல்வாரா என்ற, ‘டவுட்’ வருதே!
lll
காங்., கட்சியைச் சேர்ந்த, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: தி.மு.க., கூட்டணியில் காங்., 22 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளது. ஆனால், தி.மு.க., துரோகம் தான் இழைத்தது. 2016ல் இருந்து எம்.எல்.ஏ.,வாக உள்ள எனக்கும் கூட, கடந்த தி.மு.க., ஆட்சியில் அநீதி இழைக்கப்பட்டது. விளிம்பு நிலை மக்களுக்காக, இளைஞர் காங்., சார்பில் போராட்டம் நடத்தியதால், என் மீது தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நான் இப்போதும் எதிர்கொள்கிறேன்.
டவுட் தனபாலு: அது சரி... தி.மு.க., உங்களுக்கு துரோகம் இழைச்சதுன்னு சொல்றீங்களே... அதை பொறுத்துக் கொண்டு, 22 ஆண்டுகள் அங்கயே இருந்த உங்க சகிப்பு தன்மையை, ‘டவுட்’ இல்லாம பாராட்டியே தீரணும்!
lll
