PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

தி.மு.க.,வின் நீலகிரி எம்.பி., ராஜா: த.வெ.க., ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, 65 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களை எல்லாம் கடந்து, டில்லியில் இருந்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தமிழகம் வந்து, 135 கிலோ போதைப் பொருளை கைப்பற்றி உள்ளனர். இதன் மதிப்பு, 800 – 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறுகின்றனர். இவ்வளவு மதிப்பிலான, ‘மெத் ஆம்பெட்டமைன்’ என்ற போதைப் பொருள் தமிழகத்தில் கைப்பற்றப்படுவது, இதுவே முதல் முறை.
டவுட் தனபாலு: அது சரி... ‘எங்களது ஆட்சியில கூட இந்த அளவுக்கு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை... இதுலயும், த.வெ.க., அரசு எங்களை மிஞ்சி சாதனை படைச்சிடுச்சு’ன்னு ஆதங்கப்படுறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
lll
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஏற்கனவே தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம்; அது தொடரும். நாங்கள் ஒரு முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருப்போம். உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுடன் இப்ப எந்த பெரிய கட்சிகளும் கூட்டணியில் இல்லை... அதனால, உள்ளாட்சி தேர்தலில் அஞ்சாறு மேயர் பதவிகள், பல நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளை கேட்டு வாங்கலாம்னு திட்டம் போட்டிருப்பீங்க... ஆனா, சட்டசபை தேர்தல்லயே உங்களுக்கு 10, ‘சீட்’கள் தந்தது அதிகம்னு நினைக்கிற தி.மு.க., தலைமை, உங்க ஆசையை நிறைவேற்றுமா என்பது, ‘டவுட்’ தான்!
lll
த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன் மகனின் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக, ‘லெட்டர் பேடு’ கட்சியாக அ.தி.மு.க.,வை மாற்றி விட்டார்; அக்கட்சியை, தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விட்டார். அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்திற்கு செல்லக்கூட பழனிசாமிக்கு தகுதியில்லை; அவரால் தான் இடைத்தேர்தல் வந்தது.
டவுட் தனபாலு: ‘தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியமைக்க பழனிசாமி முயற்சி செஞ்சதால் தான், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்க கட்சிக்கு வந்து, இடைத்தேர்தல் நடந்துச்சு’ன்னு நீங்க சொல்றது, ‘டவுட்’ இல்லாம தெரியுது... அதேநேரம் பழனிசாமியின் போக்கை பார்த்தால், இன்னும் நிறைய எம்.எல்.ஏ.,க்கள் அங்கிருந்து உங்க கட்சிக்கு தாவி, அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வருமோ என்ற, ‘டவுட்’டும் சேர்ந்தே வருது!
lll
