PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

ம.தி.மு.க.,வின் திருச்சி எம்.பி., துரை வைகோ: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், தே.மு.தி.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் அமைப்பு கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை கழித்து பார்த்தால், தி.மு.க., ‘டிபாசிட்’ இழந்திருக்கும். அந்த இரண்டு தொகுதிகளிலும், த.வெ.க.,வுக்கு ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது .
டவுட் தனபாலு: ‘இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளால தான், தி.மு.க., இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கு’ன்னு சொல்றீங்க... அதேபோல, ‘த.வெ.க.,வுக்கு ஓட்டு சதவீதம் உயர்ந்திருப்பதற்கு, அந்த தொகுதிகள்ல இருக்கிற எங்க கட்சியினர் ஓட்டுகளும் காரணம்’னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ வருதே!
முன்னாள் அமைச்சரும், கலசப்பாக்கம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வுமான, ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி: ‘முன்னாள் முதல்வர் பன்னீர்-செல்வத்தை அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும்’ என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார். ஆனால், பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேறி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். போகிற போக்கை பார்த்தால், முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோரையும் அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என கூறுவார் போல தெரிகிறது. அவர்களை எப்படி மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும்? இது வேடிக்கையாக உள்ளது.
டவுட் தனபாலு: உங்க கருத்தை பார்த்தால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் திரைமறைவில் கூட்டணியா தானே இருக்கோம்... அதனால, அந்த கட்சியில இருக்கிறவங்களை போய் இழுக்க முடியுமான்னு கேட்கிறீங்களோ என்ற, ‘டவுட்’ தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: இன்றைய இளம் தலைமுறையினரான, ‘ஜென்ஸி’க் களுக்கு அ.தி.மு.க.,வின் கொள்கைகளை கொண்டு சேர்க்கும் வகையில், ‘திராவிடன் பீனிக்ஸ்’ என்ற நுால் எழுதப்பட்டுள்ளது. இதில், கட்சியின் திட்டங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்து, 31 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி புரிந்த கட்சி இது. அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது; அசைக்க முடியாது.
டவுட் தனபாலு: சரியா போச்சு... இளம் தலைமுறையினரை கவரணும்னா, அவங்களுக்கு புரியும் சமூக வலைதளங்கள் மூலம் பேசணும்... இளம் தலைமுறையினர் இந்த புத்தகத்தை வாங்கி படிச்சிட்டு, உங்க கட்சிக்கு ஓட்டு போடுவாங்கன்னு நம்புற அளவுக்கு அப்பாவியா நீங்க என்ற, ‘டவுட்’டும், சிரிப்பும் சேர்த்தே வருது!
