PUBLISHED ON : ஜூன் 04, 2026 12:13 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை: தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், வழக்கு போடுவது, கைது நடவடிக்கை போன்றவற்றில், எவ்வித தாமதமும் இல்லை. சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்கள் துரதிர்ஷ்டவசமாக, தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் இன்று, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு கொடுக்கும் சூழல் இல்லை.
டவுட் தனபாலு: துரதிர்ஷ்டவசமாக, தி.மு.க., சின்னத்தில் ஜெயித்த உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இருவரையும் ராஜினாமா பண்ண வச்சு, த.வெ.க., ஆதரவுடன் அவங்களை அதிர்ஷ்டவசமான எம்.எல்.ஏ.,க்களா உருமாற்றும் திட்டம் ஏதும் இருக்குமோ என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் ராஜ் சத்யன்: நம் கட்சியில் நடக்கும் பூசல்களால் மனம் நொந்து, தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் மகேந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கட்சியினரின் மனநிலையை, தலைவர்கள் ஒரு கணம் சிந்தித்து பார்த்திருந்தால், ஒரு துடிப்புள்ள தொண்டரை இழந்திருக்க மாட்டோம். தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.
டவுட் தனபாலு: தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால், இன்றைய அரசியல், இளைஞர்கள் வசம் போயிடுச்சு... உங்க யோசனை வரவேற்கப்படக் கூடியது தான்... அதே நேரம், 76 வயசாகியும், இன்னும் அ.தி.மு.க., அமைப்பு செயலர், மதுரை கிழக்கு மாவட்ட செயலர் பதவிகள்ல நீடிக்கிற உங்க அப்பா ராஜன் செல்லப்பா பதவி விலகுவாரா என்ற, 'டவுட்' வருதே!
லால்குடி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லீமா ரோஸ்: அ.தி.மு.க.,வை நான் தவறாக வழி நடத்துகிறேன் என்று கூறுவது தவறான தகவல். அ.தி.மு.க.,வில் நடக்கும் பிரச்னைகளை பொதுச்செயலர் பழனிசாமி பார்த்துக் கொள்வார். என்னை பற்றி அவதுாறாக பேசி வரும் பழ.கருப்பையாவுக்கு எதிராக, சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். தற்போது, தமிழகத்தில் நல்லாட்சி தான் நடக்கிறது; சிலர் தேவையில்லாமல் பேசி வருகின்றனர்.
டவுட் தனபாலு: என்னங்க இது... உங்க கட்சியின் நாலு எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா பண்ண வச்சு, த.வெ.க.,வுக்கு இழுத்திருக்காங்க... 'குதிரை பேரம் நடத்துறாங்க' என்ற உங்க கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு மாறா, 'நல்லாட்சி நடக்குது'ன்னு சான்றிதழ் தர்றீங்களே... அடுத்து ஓட்டம் பிடிக்க போகும் எம்.எல்.ஏ., நீங்கதானோ என்ற, 'டவுட்'தான் வருது!
